செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 10 பேர் பலி

Published On 2016-09-23 13:37 GMT   |   Update On 2016-09-23 13:37 GMT
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கன மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஐதாராபாத்:

வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த மூன்று தினங்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதால் ஏராளமான வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.

அடுத்த 36 மணி நேரத்துக்கு இந்த பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் கனமழைக்கு இரண்டு மாநிலங்களிலும் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பேசி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மாநில கட்டுப்பாட்டு மையத்தில் 2 ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

ஐதராபாத் நகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. மழையால் மோசமாக பாதிப்படைந்துள்ள சில பகுதிகளில் மீட்பு பணிக்கு ராணுவத்தின் உதவியை அரசு கேட்டுள்ளது.

Similar News