செய்திகள்

தூக்க முடியாத புத்தக சுமை: பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சிறுவர்களால் பரபரப்பு

Published On 2016-08-23 07:56 GMT   |   Update On 2016-08-23 07:56 GMT
மராட்டிய மாநிலத்தில் 12 வயது குழந்தைகளின் முதுகில் 7 கிலோ அளவுக்கு திணிக்கப்படும் புத்தக சுமையை கண்டித்து இரு சிறுவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:

மராட்டிய மாநிலம், சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில் படிக்கு இரு மாணவர்கள் நேற்று திடீரென இங்குள்ள பத்திரிகையாளர்கள் சங்கத்துக்கு (பிரஸ் கிளப்) வந்தனர். தங்களது பரிதாப நிலையை பற்றி கொஞ்சம் வெளியுலகுக்கு சொல்ல வேண்டும் என சுமார் 12 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவர்கள் கூறியதும் அங்கிருந்த நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், ஒலிபெருக்கிகள் மற்றும் கேமராக்களுக்கு முன்னர் அமர்ந்து சாவகாசமாக பேட்டியளித்த அவர்கள், எங்கள் பள்ளியில் அன்றாடம் 8 வகுப்புகள் நடப்பதால் குறைந்தபட்சம் 16 புத்தகங்களையும், துணைப் பாட நூல்களையும் நாங்கள் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

சுமார் 7 கிலோ எடையிலான புத்தகப் பைகளை சுமந்தபடி, பள்ளியின் மூன்றாவது மாடியில் உள்ள வகுப்பறைக்கு ஏறிச் செல்வதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது என தங்களது சோகத்தை அந்த மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இந்த புத்தக சுமையை குறைப்பது தொடர்பாக எங்கள் பள்ளியின் முதல்வருக்கு பலமுறை புகார்களை அளித்தோம். ஆனால், இதுவரை எந்த முன்னேறமும் இல்லை. அதனால், பத்திரிகையாளர்களின் மூலமாக இந்த விவகாரத்தை மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல விரும்பி இங்கு வந்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதைப்போல் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக சிறுவர்களாகிய நீங்கள் தனியாகவந்து தைரியமாக பேட்டி கொடுக்கிறீர்களே..? உங்கள்மீது பள்ளி நிர்வாகம் ஒழுங்குமீறல் நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள்? என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அந்த சிறுவர்கள், அதைப் பற்றி எல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை, எங்களது கோரிக்கையை நிறைவேற்ற உண்ணாவிரதம் இருக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளனர்.

Similar News