செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். மீது அவதூறு: ராகுல் காந்திக்கு அசாம் கோர்ட்டு சம்மன்

Published On 2016-08-06 12:55 GMT   |   Update On 2016-08-06 12:55 GMT
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி அவதூறாக பேசியதாக தொடராப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக கவுகாத்தி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
கவுகாத்தி:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்போது, அங்குள்ள பாரம்பரியமிக்க பார்பெடா சாட்ரா மடத்திற்குள் செல்லவிடாமல் தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் தடுத்ததாக பேட்டியளித்திருந்தார்.

இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக கம்ரப் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை களங்கப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி பேசியதாக கூறி, அவர் மீது ஆர்.எஸ்.எஸ். தொண்டர் அன்ஜன் போரா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

வைணவ மடத்திற்குள் செல்லவிடாமல் தடுத்ததாக கூறிய ராகுல் காந்தி, அப்பகுதிக்கு அவர் வருகை தரவே இல்லை. வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இழிவுப்படுத்தும் விதத்தில் அவர் பேசியுள்ளார் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், ராகுல் காந்தி வரும் செப்டம்பர் 21-ந்தேதி நேரில் ஆஜராகும்படி கம்ரப் கோர்ட்டு முதன்மை நீதிபதி சஞ்சய் அஷரிகா இன்று சம்மன் அனுப்பியுள்ளார்.

இவ்வழக்கில், ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் இல்லையென்றால் இரண்டுமே தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Similar News