உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மின் கட்டணத்துடன் கூடிய அபராத தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் - விசைத்தறியாளர்கள் கோரிக்கை

Published On 2023-05-20 08:00 GMT   |   Update On 2023-05-20 08:00 GMT
  • விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.
  • மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.

பல்லடம் :

திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இந்தநிலையில், விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி, திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது :- தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று நிலுவையில் உள்ள விசைத்தறி மின் கட்டணத்தை கட்டுவதற்கு 6 தவணைகளாக பிரித்து கட்டணம் செலுத்தவும்,மேலும் மின் கட்டணத்தில் உள்ள அபராத தொகையை கழித்தும் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்த, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி.

இந்தநிலையில் தமிழ்நாடு மின் வாரியம் விசைத்தறியாளர்களுக்கு கடந்தாண்டு 2022 செப்டம்பர் முதல் ஏப்ரல் 2023 வரை நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்தை அபராதத்துடன் ஆறு மாத தவணையில் செலுத்த வேண்டும் என தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி விசைத்தறியாளர்கள் நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்துடன் அபராததொகையும் சேர்த்துசெலுத்தி வருகின்றனர்.திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்த தயாராக உள்ளோம். அபாரதத் தொகையை தள்ளுபடி செய்யக்கோரி அமைச்சரை சந்திப்பதற்காக நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்.அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News