உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் அருகே இரு தரப்பினர் மோதல் வழக்கில் ஒருவர் கைது - 6 பேர் மீது வழக்கு

Published On 2022-09-22 11:40 GMT   |   Update On 2022-09-22 11:40 GMT
  • சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
  • இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு,பின்னர் கைகலப்பாக மாறியது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் எஸ்.ஆர்.சி. நகர் பஸ் நிறுத்தம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு,பின்னர் கைகலப்பாக மாறியது. இதற்குள் ரோட்டில் நடந்து சென்றவர் தரப்பில் இருந்து வந்த நபர்கள், காரில் வந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து காரில் வந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு திரண்டனர். மோதல் ஏற்படும் சூழ்நிலையில் அங்கு வந்த பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அந்தப் பகுதிக்கு நேரில் வந்தார். அப்போது அவரிடம் ஒரு தரப்பினர், எதிர்த் தரப்பினர்,சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களால் சமூகவிரோதச் செயல்கள் அடிக்கடி நடப்பதாகவும், தட்டி கேட்பவர்களை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாகவும் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதன் பின்னர் இரு தரப்பினரும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் இதையடுத்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஹரிதாஸ் மகன் மலைவாசன்(வயது 26) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News