உள்ளூர் செய்திகள்

பத்திரப்பதிவு ஆவணத்தை கலெக்டர் வினீத்திடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி. அருகில் அதிகாரிகள் உள்ளனர். 

ஏழை மக்களுக்கு சொந்த நிலத்தை வழங்கிய அமைச்சர்

Published On 2022-09-04 05:59 GMT   |   Update On 2022-09-04 05:59 GMT
  • 26 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
  • முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பெயரில் நன்கொடையாக அமைச்சர் வழங்கினர்.

வெள்ளகோவில் :

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் முத்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ .7.40 கோடி மதிப்பீட்டில் 2,401 பணிகள் முடிவுற்றும் ரூ.9.26 கோடி மதிப்பீட்டில் 816 பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், முத்தூர் பேரூராட்சியில் ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் 20 பணிகள் முடிவுற்றும், ரூ .6.32 கோடி மதிப்பீட்டில் 12 நடைபெற்று வருகிறது. மேலும் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக அமைச்சர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் "நெல் ஜெயராமன் மரபு சார் நெல் விதை ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்" கீழ் துர்யமல்லி ரக பாரம்பரிய நெல் விதைகளை 3 விவசாயிகளுக்கு வழங்கியும், வருவாய்த் துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சாமிநாதனின் மகன் ஆதவன் ரூ.4லட்சம் மதிப்புடைய 2.72 சென்ட் பரப்பளவு கொண்ட தனக்கு சொந்தமான நிலத்தினை முத்தூர் பேரூராட்சி மாதவராஜபுரத்தில் வசிக்கும் பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்காக, முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பெயரில் நன்கொடையாக வழங்கினர். இதையடுத்து பத்திர பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலெக்டர் வினீத்திடம் வழங்கினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் ,உதவி இயக்குநர் ( ஊராட்சிகள் ) மதுமதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி ) வாணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முத்தூர் பேரூராட்சி மக்களுக்காக தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

Tags:    

Similar News