உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் அருகே ராகவேந்திரா கோவிலில் உண்டியல் உடைத்து ரூ.75 ஆயிரம் கொள்ளை

Update: 2022-08-19 11:13 GMT
  • கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
  • கொள்ளையர்கள் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்ததுடன் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

சுசீந்திரம்:

சுசீந்திரம் பைபாஸ் ரோட்டில் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மாலை நேரங்களில் பூஜைகள் நடந்து வருகிறது.

இந்த கோவிலில் வியாழக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வார்கள். நேற்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

இன்று காலையில் கோவில் மேற்பார்வையாளர் அனந்தகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் இருந்த இரண்டு உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. உண்டியலில் இருந்த ரூ.75 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று இருந்தனர். மேலும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்ததுடன் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ராகவேந்திரா கோவிலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News