உள்ளூர் செய்திகள்

கார்த்திகையையொட்டி உடுமலையில் விற்பனைக்கு குவிக்கப்படும் கேரள அகல் விளக்குகள்

Update: 2022-12-01 10:17 GMT
  • கேரளாவிலிருந்து வந்துள்ள சிறிய விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
  • உள்ளூர்களில் பெரிய விளக்குகள் அதிக அளவு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

உடுமலை:

தீப ஒளி திருநாளாம் திருக்கார்த்திகை தீபம் வருகிற டிசம்பர் 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில்களில், மண் விளக்குளில் தீபம் ஏற்றி வழிபடுவது பாரம்பரியமாக நடந்து வருகிறது. திருக்கார்த்திகைக்கு தேவையான தீபங்கள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, புக்குளம், பூளவாடி, பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

தற்போது விளக்கு தயாரிப்பதற்கான மண் கிடைப்பதில் சிக்கல், தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால் உள்ளூர் தயாரிப்புகள் குறைந்து கேரள மாநிலம், பாலக்காடு பகுதியிலிருந்து, சிறிய வகை விளக்குகள் வரத்து காணப்படுகிறது. திருக்கார்த்திகை நெருங்கி வரும் நிலையில் உடுமலையில், பல்வேறு இடங்களில் மண் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

கேரளாவிலிருந்து வந்துள்ள சிறிய விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உள்ளூர்களில் பெரிய விளக்குகள் அதிக அளவு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பெரிய விளக்குகள் 150 ரூபாய் வரை விற்கிறது. மேலும் பல்வேறு வடிவங்களிலும் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

புதிதாக விநாயகர் சிலையுடன் கூடிய ஐந்து முக மண் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது. முழுவதும் மண்ணால் செய்யப்பட்டு இயற்கை சாயம் பூசப்பட்டுள்ளது. இந்த விளக்கு 50 முதல் 100 ரூபாய் வரை விற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்செல்கின்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், மண் விளக்கில் தீபம் ஏற்றுவது பாரம்பரிய முறையாகவும்,சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வழிபாட்டு முறையாகும். இதனால் மண் விளக்குகளில் தீபம் ஏற்றும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அதனால் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது என்றனர்.

மேலும் கார்த்திகை திருவிழா நெருங்குவதையொட்டி பூளவாடியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விற்பனையும் அதிகரித்து உள்ளது. சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான 1000 அகல் விளக்குகள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

அகல்விளக்கு தயாரிப்பு குறித்து தொழிலாளி ஒருவர் கூறியதாவது:- உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் 2 குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வரும் நிலையில் உப்பாறு ஓடையில் களிமண் எடுத்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு அகல் விளக்கு விற்பனை அமோகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கார்த்திகை தீப திருவிழாவுக்கு தேவையான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் திருப்பூர் அருகே உள்ள பெருந்தொழுவு, சம்மந்தம்பாளையத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் சுறுசுறுப்பாக துவக்கியுள்ளனர்.

இதுகுறித்து அகல் விளக்கு தயாரிப்பவர்கள் கூறியதாவது:-

கார்த்திகை மாதம் துவங்கும் முன்னரே, விளக்கு செய்யும் பணியை துவங்கி விட்டோம். சிறிய விளக்கு, ஐந்து முக விளக்கு, பெரியது, மூன்று முக விளக்கு உள்ளிட்ட ரகங்களை செய்கிறோம்.

இப்போது, வடமாநிலங்களில் இருந்து பல்வேறு டிசைன்களில் மெஷின் கட்டிங் மூலம் விளக்குகள் பல வண்ணங்களில் விளக்குகள் வருகிறது.

ஆனால், நம் பராம்பரியம், நமது ஊரின் களிமண் எடுத்து செய்யும் அகல்விளக்குகள் தான் சிறப்பானது. தமிழர் பாரம்பரிய முறைப்படி, மண் விளக்குகளில் தான் கார்த்திகை தீபத்தன்று, தீபம் ஏற்றி வைக்க வேண்டும். ஆண்டுகள் பல கடந்தாலும் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வதால், எங்கள் தொழிலும் ஜொலித்து கொண்டே இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News