உள்ளூர் செய்திகள்

தலைமை கழகத்துக்கு திடீர் வருகை- அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

Published On 2022-09-26 05:55 GMT   |   Update On 2022-09-26 05:55 GMT
  • பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் தேதி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

அ.தி.மு.க.வுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட தலைமைப்பதவிக்கான போட்டியில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியது. பொதுக்குழு கூட்டத்தை நடத்தி இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அடுத்த கட்டமாக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த உள்ளனர்.

விரைவில் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென்று தலைமை கழகத்துக்கு வந்தார்.

இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு நேற்று மாலையில் அவசர அழைப்பு கொடுக்கப்பட்டது. இதனால் முக்கிய நிர்வாகிகள் அவசர அவசரமாக புறப்பட்டு இன்று காலை சென்னை வந்தனர்.

காலை 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றார்கள்.

பின்னர் கூட்ட அரங்கில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன், நத்தம் விசுவநாதன் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை. ரவி, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, கே.பி.கந்தன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கட்சி அலுவலகம் உடைக்கப்பட்டதை சீரமைத்து இருந்ததை பார்வையிட்டார்.

பின்னர் கீழ்தளத்தில் சீரமைக்கப்பட்ட தனது அலுவலகத்தில் அமர்ந்து சிறிது நேரம் டி.ஜெயக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சிலருடன் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தார்.

Tags:    

Similar News