உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் மூலம் ரூ.100 கோடி மோசடி புகாரில் கைதானவர் நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2022-08-04 11:01 GMT   |   Update On 2022-08-04 11:01 GMT
  • ஆன்லைன் வேலை என்ற பெயரில் பெயரளவில் நேர்முகத் தேர்வு நடத்தி வேலையில் சேர்த்துக் கொள்வதாக கூறுவது வழக்கம்.
  • சம்பளம் தர வேண்டுமெனில் டெபாசிட் தொகை தேவை எனக்கூறி ஆயிரக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளனர்.

நாகர்கோவில்:

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலால் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். பணத்தை இழந்த சிலர் தங்கள் உயிரை விட்டுள்ளனர்.

சைபர் கிரைம் போலீசார் அவ்வப்போது சில மோசடி கும்பலை கைது செய்தாலும், மோசடிகள் நின்ற பாடில்லை. இதில் ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி வாலிபர்களிடம் பணம் பறிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மும்பையை சேர்ந்த ராஜா என்பவர் மலேசியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

இவர் மும்பை, மலேசியா, நாகர்கோவில் போன்ற பல்வேறு பகுதிகளில் ஒரு கும்பலை வைத்து ஆன்லைன் மூலம் வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும், இதில் ஈடுபட்ட ஒருவர் நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திட்டுவிளைவு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் சாரோன் (வயது 30)என்பதும் தெரியவந்தது.

அவர் தற்போது சொந்த ஊரில் இருப்பதை அறிந்த மும்பை சைபர் கிரைம் சி.ஐ.டி. ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசாரின் துணையுடன் திட்டுவிளை குருசடி வந்தனர்.

அங்கு வீட்டில் இருந்த பிரின்ஸ் சாரோனிடம் விசாரணை நடத்தியதில் மோசடியில் அவருக்கு பங்கு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து சுமார் 100 சிம் கார்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட பிரின்ஸ் சாரோனை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவரை விசாரணைக்காக போலீசார் மும்பை அழைத்துச் செல்ல உள்ளனர்.

100 சிம் கார்டுகள் வைத்திருந்தது ஏன் என்பது பற்றி பிரின்ஸ் சாரோனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ஆன்லைன் வேலை என்ற பெயரில் பெயரளவில் நேர்முகத் தேர்வு நடத்தி வேலையில் சேர்த்துக் கொள்வதாக கூறுவது வழக்கம். பின்னர் சம்பளம் தர வேண்டுமெனில் டெபாசிட் தொகை தேவை எனக்கூறி ஆயிரக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளனர். மேலும் வேலைக்கு டெபாசிட் தொகை என்ற பெயரிலும் பணம் பெற்றுள்ளனர். அதன் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. அதன் பின்னர் தங்களது சிம் கார்டை அகற்றிவிட்டு புதிய சிம் கார்டை பயன்படுத்தி மற்றொரு மோசடியில் ஈடுபடுவது உண்டு. இதனால் தான் 100-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் அவனிடம் இருந்துள்ளது.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News