தமிழ்நாடு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

Published On 2024-05-22 05:20 GMT   |   Update On 2024-05-22 06:02 GMT
  • மாநிலம் முழுவதும் 7,283 தனியாா் பள்ளிகளில் சுமாா் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
  • தமிழகத்தில் இந்த திட்டத்தின்கீழ், இதுவரை 4.6 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் பயின்று வருகின்றனா்.

சென்னை:

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு மாநிலம் முழுவதும் 7,283 தனியாா் பள்ளிகளில் சுமாா் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.

இந்தத் திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின்கீழ், இதுவரை 4.6 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் பயின்று வருகின்றனா்.

வரும் கல்வியாண்டுக்கான (2023-24) இலவச மாணவா் சோ்க்கை இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 22-ந் தேதி தொடங்கி கடந்த திங்கட்கிழமை (20-ந் தேதி) நிறைவடைந்தது.

நிகழாண்டில் 1.30 லட்சம் பெற்றோா் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, அவை பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

ஏதேனும் பள்ளியில் நிா்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் மே 28-ந் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தோ்வு செய்யப்படுவா்.

இந்த திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் பெயா் உள்ளிட்ட விவரம் வருகிற 29-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தையோ அல்லது 14417 என்ற உதவி மைய எண்ணையோ அணுகலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News