உள்ளூர் செய்திகள்

குமரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

Published On 2024-05-22 11:26 IST   |   Update On 2024-05-22 11:26:00 IST
  • வெள்ளமாகச் செல்லும் தண்ணீர் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து செல்கிறது.
  • செண்பகராமன்புதூர், தோவாளை பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வருகிற 27-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ள நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.

இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாரல் மழை நீடித்தது. கொட்டாரத்தில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிக பட்சமாக 84.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குளச்சல் பகுதியிலும் கன மழை பெய்தது. மயிலாடி, நாகர்கோவில் கன்னிமார், கோழிப் போர்விளை, மாம்பழத்துறையாறு, களியல், குழித்துறை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது.


இதனால் குளு குளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளமாகச் செல்லும் தண்ணீர் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து செல்கிறது.

அருவியின் மேல் பகுதியிலும் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திற்பரப்பு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். தொடர் மழையின் காரணமாக சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கோதை ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை ஏற்கனவே 45 அடியை கடந்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டத்தை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரும் தண்ணீரை திறந்து விடவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.


நேற்று அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.10 அடியாக இருந்தது. அணைக்கு 766 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 636 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 50.05 அடியாக உள்ளது. அணைக்கு 304 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் 1-நீர்மட்டம் 11.84 அடியாகவும், சிற்றாறு 2-அணையின் நீர்மட்டம் 11.94 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.40 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 14.76 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் வெகுவாக உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 0.80 அடியாக உள்ளது.

தொடர் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி போன்றவை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

செண்பகராமன்புதூர், தோவாளை பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 33.2, பெருஞ்சாணி 23.8, சிற்றார் 1-.24.2, சிற்றார்2-26.8, கன்னிமார் 14.2, கொட்டாரம் 84.6, மயிலாடி 58.4, நாகர்கோவில் 45, பூதப்பாண்டி 20, முக்கடல் 15.8, பாலமோர் 30.2, தக்கலை 44.4, குளச்சல் 75.2, இரணியல் 55.2, அடையாமடை 37.2, குருந்தன் கோடு 61.4, கோழிப்போர்விளை 46.2, மாம்பழத்துறையாறு 35, களியல் 37.4, குழித்துறை 52.2, சுருளோடு 21.6, ஆணைக்கிடங்கு 31.6, திற்பரப்பு 29.6, முள்ளங்கிணாவிளை 42.6.

Tags:    

Similar News