உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் கூடுதலாக காற்றாலை மூலம் 30 சதவீதம் மின் உற்பத்தி அதிகரிப்பு

Published On 2022-06-07 09:52 GMT   |   Update On 2022-06-07 10:50 GMT
  • காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம்.

கோவை:

காற்று அதிகம் வீசி வரும் காரணத்தால் தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

தினசரி மின் தேவையில் கூடுதலாக 30 சதவீதம் வரை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதாவது 4,500 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திதுறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15-ந் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் தொடங்கி உள்ளது. காற்று சீசன் தொடங்கி உள்ள காரணத்தால் தினமும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி மின் சேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மற்றும் அதற்கு மேல் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் காற்று சீசன் தொடங்கியுள்ள காரணத்தால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

இனி வரும் 3 மாதங்களில் காற்று அதிகம் இருக்கும் என்ற காரணத்தால் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும்.

சுற்றுச்சூழல், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இயற்கை கொடுத்த வரமாகவே சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறை கருதப்படுகிறது.

இதன் காரணமாகவே மத்திய, மாநில அரசுகள் இத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

Tags:    

Similar News