உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்:பெயர்களை கட்டாயம் பதிவு செய்ய கலெக்டர் அறிவிப்பு

Published On 2023-01-01 09:44 GMT   |   Update On 2023-01-01 09:44 GMT
  • விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
  • வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2022-23ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-23 என்ற பெயரில், மாநிலம் முழுவதும் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி தாங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கும் வகையி, மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்கவிரும்பும் வீரர், வீராங்கனைகள் தங்கள் பெயரினை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.1000 மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் கபடி, கூடைப்பந்து, கையுந்து பந்து முதல் பரிசு ரூ.36 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.24 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரம், கால்பந்து, ஹாக்கி போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.54 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.36 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.18 ஆயிரம் வீதம் ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

மேற்கண்ட போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703487 மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பெற்றிடலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Tags:    

Similar News