உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கைம்பெண் கடன் திட்டத்தில் 296 பேருக்கு ரூ.51.78 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது- கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

Published On 2022-09-04 09:05 GMT   |   Update On 2022-09-04 09:05 GMT
  • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், நலிவுற்ற விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பிலான மக்கள் பயனடையும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள், நல திட்டங்கள் அறிவித்து வருகிறார்.
  • கடன் தொகை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்.

தூத்துக்குடி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், நலிவுற்ற விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பிலான மக்கள் பயனடையும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள், நல திட்டங்கள் அறிவித்து வருகிறார்.

கைம்பெண் கடன் திட்டம்

அதன் ஒருபகுதியாக தமிழக சட்டப் பேரவையில் 2021-2022-ம் ஆண்டுக்கான கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மிகவும் குறைந்த வட்டியான 5 சதவீத வட்டியில் அவர்களின் பொருளாதார நிலை உயர கடன் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கைம்பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் ஆகியவர்களுக்கு கைம்பெண் கடன் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

296 பேருக்கு

அதன்படி ரூ.4 ஆயிரத்துக்கும் குறைவான மாத வருமானம் உள்ள அனைத்து கைம்பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் ஆகியோர் மிகவும் குறைவான 5 சதவீத வட்டி கொண்ட இக்கடன் திட்டத்தினை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

கடன் தொகை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இக்கடன் தொகையினை அதிகபட்சமாக 120 நாட்களுக்குள் மாதமிருமுறை என்ற அடிப்படையில் திருப்பி செலுத்தப்பட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 26 கிளைகளிலும் இக்கடன் திட்டம் தொடங்கப்பட்டு இது வரை 296 பயனாளிகளுக்கு ரூ.51.78 லட்சம் மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடன் திட்டத்தில் பங்குபெற தேவையான ஆவணங்களான விதவை சான்று, விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரரின் ஆதார் கார்டு மற்றும் ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் ஆகிய ஆவணங்களை அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சமர்ப்பித்து கிளை மேலாளரை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags:    

Similar News