உள்ளூர் செய்திகள்

இலந்தைகுளத்தில் கலக்கும் சாக்கடை கழிவுநீர் பகுதியை பார்வையிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்.

பாளை அருகே இலந்தைகுளத்தில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் - காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-14 08:50 GMT   |   Update On 2023-11-14 08:50 GMT
  • ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  • பேச்சுவார்த்தையின் போது கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது இலந்தைகுளம். இதன் அருகில் பாளையங்கோட்டை ரெயில் நிலையம், அறநிலையத்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், அதனருகில் காவலர் குடியிருப்பு, ஆயுதப்படை மைதானம், இலந்தை குளத்திற்கு மேற்கே ராஜேந்திரன் நகர் உள்ளது.

இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இலந்தை குளத்தில் அன்பு நகரில் இருந்து வரும் பாதாள சாக்கடை கழிவுநீர் முழுவதுமாக கலப்பதால் குளம் மாசடைந்து அதிக அளவில் கொசு உற்பத்தி ஆகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் மாநகராட்சி கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை இலந்தை குளத்தில் கலக்கும் பகுதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் அனுராதா, சங்கர பாண்டி யன், காங்கிரஸ் நிர்வாகிகள் மாரியப்பன், வெள்ளை பாண்டியன், ராஜேந்திரன், கங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த தகவல் அறிந்து உதவி போலீஸ் கமிஷனர் காளிமுத்து, இன்ஸ்பெக்டர் முருகன், சுகாதார அலுவலர் முருகேசன் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News