உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனை; சொத்துக்களை முடக்க நடவடிக்கை

Published On 2022-06-17 07:47 GMT   |   Update On 2022-06-17 07:47 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையால் பயனடைந்தவர்களில் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் உத்தரவின்படி சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்த மாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்ததாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டு 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 85 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்த ரூ.6 லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், கஞ்சா வியாபாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி சார்ந்த புலன் விசாரணை மேற்கொண்டு அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அதனால் பயன் அடையும் அவர்களது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் என மொத்தம் 54 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, கடந்த காலங்களில் இதுபோன்று கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதனால் பயன் அடைந்த அவர்களது குடும்பத்தாரின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும் தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அதிரடி நடவடிக்கை தொடரும். கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் எனது பிரத்யேக செல்போன் எண்ணான 7603846847 மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 04567-230759 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News