உள்ளூர் செய்திகள்

தண்ணீரின்றி காய்ந்து கருகி வரும் நெற்பயிர்கள் மத்தியில் சோகத்துடன் படுத்து கிடக்கும் விவசாயி முனியாண்டி.

தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிர்கள்

Published On 2023-08-02 10:18 GMT   |   Update On 2023-08-02 10:18 GMT
  • தஞ்சை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் மட்டும் 50 ஏக்கரில் குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
  • தண்ணீர் இல்லாததால் வயல்களில் பாலம் பாலமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் 16-ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இம்முறை டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்திலும் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வந்தன.

ஆனால் மாவட்டத்தில் சில பகுதிகளில் வாய்க்கால்களில் போதிய தண்ணீர் வராததால் குறுவை பயிர்கள் காய்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் மட்டும் 50 ஏக்கரில் குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

இந்த பகுதிக்கு தென் பெரம்பூரில் இருந்து ஜம்பு காவேரியில் தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஜம்பு காவேரியில் இருந்து தண்ணீர் வரவில்லை.

இதனால் நடவு நட்டு 20 நாட்களான குறுவை பயிர்கள் காய்ந்து வருகின்றன.

தண்ணீர் இல்லாததால் வயல்களில் பாலம் பாலமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதை பார்த்து வேதனை அடைந்த அப்பகுதி விவசாயி முனியாண்டி என்பவர் காய்ந்த பயிர்கள் மத்தியில் சோகத்துடன் படுத்து கிடக்கும் காட்சி மற்ற விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.

இது குறித்து விவசாயி முனியாண்டி கூறும் போது, நான் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து நடவு செய்தேன். கடந்த 20 நாட்களாக ஜம்பு காவேரியில் தண்ணீர் வரவில்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள் .

கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதை பார்க்க வேதனையாக உள்ளது.

வயல்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வயல்களில் படுத்து உள்ளேன்.

உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News