உள்ளூர் செய்திகள்

விழாவில் அமைச்சர் மதிவேந்தன் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட கலெக்டர் உமா மற்றும் ராஜேஷ்குமார் எம்.பி., சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா மற்றும் பலர் உள்ளனர்.

குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-10-31 09:57 GMT   |   Update On 2023-10-31 12:14 GMT
  • 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடுவதன் துவக்க விழா நடைபெற்றது. மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மருத்துவர் உமா தலைமை வகித்தார்.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் கலந்து கொண்டு குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடுவதன் துவக்கமாக, மரக் கன்றுகளை நட்டார்.

அப்போது வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் நாவல் மரம், இலுப்பை மரம், புளிய மரம், மகாகனி மரம், நீர் மருது தலா 250 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

காற்றிலுள்ள மாசினைக் கட்டுப்படுத்த, கரியமில வாயுவின் அளவைக் குறைத்து ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், தேவையான அளவு மழைப்பொழிவைப் பெறவும் குறுங்காடுகள் உதவுகின்றன. அகிரா மியாவாக்கி என்ற ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அறிமுகம் செய்த காடு வளர்ப்பு முறைதான் மியாவாக்கி முறையாகும். இந்த முறையில் குறைந்த காலத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஏற்படுத்த முடியும். மியாவாக்கி முறையினால் பத்து ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்துவிடும், பொதுவாக இந்த முறையில் மரங்கள் இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும்.

கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்து அல்லது புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து அதில் குறுங்காடுகளை உருவாக்கலாம் அல்லது பஞ்சாயத்து ஏரிகளில் தண்ணீர் தேங்கி நிற்காத பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி அந்த இடங்களில் குறுங்காடுகளை உருவாக்கலாம். குறுங்காடுகள் உருவாக்குவதால் பல உயிரினங்கள் பயனடையக் கூடும். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான காலி நிலங்கள் இருப்பின் அவற்றிலும் குறுங்காடுகளை அமைக்கலாம். மேலும், இந்த மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைமை பொறியாளர் செங்குட்டுவன், துணைத் தலைமை ரசாயனர் சந்திரசேகரன், கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன், அலுலக மேலாளர் கணபதி, சிவில் பொறியாளர் தங்கவேலு, சர்க்கரை ஆலை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News