உள்ளூர் செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: காவிரி நதிநீர் ஆணையம் 17-ந்தேதி கூடி ஆலோசனை

Published On 2022-06-07 08:14 GMT   |   Update On 2022-06-07 09:27 GMT
  • மேகதாது என்ற இடத்தில் புதிய பிரம்மாண்ட அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது.
  • மேகதாது விஷயத்தில் காவிரி நதிநீர் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை:

தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 127.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நீர் பங்கீடை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது.

இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பருவமழை பெய்ததால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த ஓராண்டில் 281 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

இது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்த அளவை விட 103.8 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாகும்.

இதற்கிடையே மேகதாது என்ற இடத்தில் புதிய பிரம்மாண்ட அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இதுதொடர்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. காவிரி நதிநீர் தொடர்பாக எந்த முடிவு எடுக்கவும் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மேகதாது விஷயத்தில் காவிரி நதிநீர் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.கல்தர் இந்த கூட்டத்தை நடத்துகிறார். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

Tags:    

Similar News