உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் நடந்தது

சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டம்- சாலை மறியல்

Published On 2022-09-23 08:23 GMT   |   Update On 2022-09-23 08:23 GMT
  • திருமங்கலம் விரிவாக்கப் பகுதியில் சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டம்- சாலை மறியல் நடந்தது.
  • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமங்கலம்

திருமங்கலம் மற்றும் மறவன்குளம், வடகரை ஊராட்சி விரிவாக்க பகுதிகளான மதுரா சிட்டி, முத்தமிழ்நகர், பிரபாகரன்நகர், கலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2500-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.

20 ஆண்டுகளாக இந்த பகுதியில் சாலை, மின்விளக்கு, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தற்போது வரை செய்து தரப்படவில்லை. இதன் ஒரு பகுதி விரிவாக்க பகுதியாகவும், மீதி மறவன்குளம் மற்றும் வடகரை விரிவாக்க பகுதியாகவும் இருப்பதால் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சாலை அமைக்க வில்லை. ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருந்தும் சாலை அமைக்கப்படவில்லை.

மழை காலங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நுழைவுப் பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை.

இதை கண்டித்து இன்று குண்டும், குழியுமான சாலைகளில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். மேலும் விமான நிலைய சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். வடகரை பஞ்சாயத்து தலைவர் தற்காலிகமாக சாலை அமைப்பதாக தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News