உள்ளூர் செய்திகள்

சேரும், சகதியுமாக மாறிய புத்தக திருவிழா அரங்கம்

Published On 2022-08-28 09:25 GMT   |   Update On 2022-08-28 09:25 GMT
  • சேரும், சகதியுமாக புத்தக திருவிழா அரங்கம் மாறியது
  • கனமழை காரணமாக

கரூர்:

கரூர் புத்தகத் திருவிழா அரங்கினுள் மழை வெள்ளம் புகுந்ததால், புத்தகங்கள் சேதமடைந்தன. நுழைவாயில் பகுதி சேறும், சகதியுமானதால் நேற்று மாலை வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் கரூர் புத்தகத் திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் 135 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 115ல் புத்தக அரங்குகள், காவல்துறை, மாவட்ட நூலகத்துறை, வனத்துறை, இல்லம்தேடி கல்வி உள்ளிட்ட அரசின் துறைகளின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.

கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக புத்தகத்திருவிழா அரங்குக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் முன் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளின் உள் சுமார் 1 அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்ததில் புத்தகங்கள் வீணாகின. அரங்கின் முன் பாதி பகுதியில் அமைந்திருந்த சுமார் 70 கடைகள் பாதிக்கப்பட்டன.

பொக்லைன் மூலம் நேற்று அதிகாலை வாய்க்கால் வெட்டி மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது. அரங்கின் முன் பாதி பகுதிகள் சேறும், சகதியுமான மாறியிருந்தன. பொக்லைன் மூலம் நுழைவாயில் பகுதியில் எம் சாண்ட் கொட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு சேறும், சகதியும் சரி செய்யப்பட்டன. மழை வெள்ளம் உள்ளே புகுந்ததால் அரங்கின் முன் பாதி பகுதியில் அமைந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் பாதிக்கப்பட்டன.

பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து வரவேண்டாம் என தகவல் அளிக்கப்பட்டது. மேலும் விடுமுறை நாள் என்பதால் புத்தகத் திருவிழாவை காண வந்த பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிந்தனை அரங்க பகுதிகள் மண் கொட்டப்பட்டு சீரமைக்கப்பட்டன. பணிகள் நிறைவு பெற்ற பிறகு மாலை புத்தகத் திருவிழாவுக்கும், திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றத்திற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News