உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே பாரதிய ஜனதா பிரசார வாகனத்தின் மீது கல் வீசிய 3 பேர் சிக்கினர்

Published On 2023-06-30 11:22 GMT   |   Update On 2023-06-30 11:22 GMT
  • போலீசார் விசாரணை
  • பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

கன்னியாகுமரி:

பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

நாகர் கோவில் நாகராஜா திடலில் நாளை மறுநாள் (2-ந்தேதி) நடைபெறும் குமரி சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். இது தொடர்பாகவும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

செண்பகராமன் புதூர் பகுதியில் தோவாளை இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் வாகன பிரசாரம் நடை பெற்றது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் கிடந்த கல்லால் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இதுகுறித்து மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பத்மநாபன் ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சி.சி.டி.வி. காமிராவில் பா.ஜ.க. நிர்வாகிகளை மிரட்டி சென்றவர்களின் வாகன எண் பதிவாகி இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளை மிரட்டிய வர்கள் குறித்து அடையாளம் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News