உள்ளூர் செய்திகள்

கேரளாவில் இருந்து நாகர்கோவிலுக்கு டீசல் ஏற்றி வந்த சரக்கு ரெயிலில் திடீர் தீ விபத்து - நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

Published On 2022-08-11 10:03 GMT   |   Update On 2022-08-11 10:03 GMT
  • ரெயிலின் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும் காட் பெட்டியில் இருந்து 7 -வது வேகனில் உள்ள 2 சக்கரங்கள் திடீரென பழுதாகி நின்றது
  • பெரும் விபரீத சம்பவம் நடைபெறுவதற்கு முன் இதனை கண்ட காட் பெட்டியிலிருந்து ரெயில்வே ஊழியர் உடனே இதுபற்றி என்ஜின் டிரைவருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தார்.

நாகா்கோவில்:

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் நெல்லைக்கு புறப்பட்டது. சரக்கு ரயிலில் மொத்தம் 87 வேகன்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ரெயில் இன்று காலை நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது ரெயிலின் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும் காட் பெட்டியில் இருந்து 7 -வது வேகனில் உள்ள 2 சக்கரங்கள் திடீரென பழுதாகி நின்றது. இதனால் தண்டவாளத்தில் சக்கரங்கள் ஓடாமல் அதில் உரசியபடி சென்றது. இதன்காரணமாக அந்த சக்கரத்திலிருந்து தீப்பொறி கிளம்பியது.

அந்த வேகன் முழுவதும் டீசல் நிரப்பப்பட்டு இருந்தன. அதில் இருந்த டீசலும் வேகனில் இருந்து சிந்தியடி வழிந்து கொண்டு இருந்தன.

பெரும் விபரீத சம்பவம் நடைபெறுவதற்கு முன் இதனை கண்ட காட் பெட்டியிலிருந்து ரெயில்வே ஊழியர் உடனே இதுபற்றி என்ஜின் டிரைவருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தார். உடனே அவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

பின்னர் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர் இருவரும் சம்பந்தப்பட்ட வேகனை ஆய்வு செய்தனர். இதில் சக்கரத்தின் பிரேக் செயல் இழுந்து தண்டவாளத்தில் ஓடமால் இருந்ததும், இதனால் தீப்பொறி கிளம்பியதும் தெரியவந்தது.

இதனை டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர் இணைந்து சரிசெய்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு மற்ற ரெயில்வே ஊழியர்களும் வந்து பார்வையிட்டனர். பழுதுநீக்கப்பட்டதை உறுதி செய்த பின்பு ரெயில் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News