உள்ளூர் செய்திகள்

கடத்தல் புகாரில் போலீசார் தேடியதால் மாணவியை தனியாக தவிக்கவிட்டு தலைமறைவான தொழிலாளி

Published On 2023-07-03 07:15 GMT   |   Update On 2023-07-03 07:15 GMT
  • ராதாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
  • கோபம் கலந்த பாசத்தை வெளிப்படுத்தி கதறி அழுதனர்

கன்னியாகுமரி :

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பண்டாரக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவரும், இவரது மனைவி முத்துபேச்சியும் கடந்த ஒரு வருடமாக குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பெரியவிளை கடற்கரை பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களது 14 வயது சிறுமி ராதாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு சிறுமி பெரியவிளை வந்து பெற்றொருடன் தங்கினாள். இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி இரவு பெற்றோருடன் படுத்து தூங்கிய சிறுமியை காணவில்லை. சிறுமியை ஈத்தாமொழி அருகே சுண்டபற்றி விளையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி செல்வகுமார் (35) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்பட்டது.

இதுகுறித்து தாயார் முத்துபேச்சி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். போலீசார் இருவரையும் தேடுவதை அறிந்த செல்வகுமார் நேற்று மாணவியை மணவாளக்குறிச்சிக்கு பஸ் ஏற்றி விட்டு தலைமறைவானார்.

இந்நிலையில் நேற்று காலை மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா மண்டைக்காடு அருகே பரப்பற்று பகுதியில் ரோந்து செல்லும்போது, அங்கு தனியாக ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள். போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த சிறுமி பெரியவிளை கூடாரத்திலிருந்து காணாமல் போனவர் என தெரியவந்தது. உடனே போலீசார் சிறுமியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி மீட்கப்பட்ட தகவலறிந்த உறவினர்கள் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்திலேயே சிறுமியை பேசி, கோபம் கலந்த பாசத்தை வெளிப்படுத்தி கதறி அழுதனர். இது காண்போரின் நெஞ்சை உருக்கியது.

Tags:    

Similar News