உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

சிறுதானிய மாவுகளுக்கு அதிகரிக்கும் மவுசு

Published On 2022-06-20 06:21 GMT   |   Update On 2022-06-20 06:21 GMT
  • குடிசைத்தொழிலாக பலர் செய்து வருவாய் ஈட்டி வருகிறார்கள்.
  • உயிர்ச் சத்துக்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் பிடிக்கிறது.

உடுமலை :

பர்கர், பீட்சா என மேற்கத்திய உணவுகளில் மோகம் கொண்ட பலரும் நமது பாரம்பரிய உணவு முறைக்குத் திரும்பியுள்ளனர்.குறிப்பாக சிறுதானிய உணவு வகைகளை பலரும் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கம்பு, தினை, ராகி, குதிரைவாலி, சோளம், மக்காச்சோளம், சாமை போன்ற சிறுதானியங்கள் மீண்டும் தமிழக இல்லத்தரசிகளின் தேர்வாக மாறியுள்ளது.சமூக வலைத்தளங்களில் சிறுதானிய உணவு வகைகள் அவற்றின் செய்முறைகள் மற்றும் அவற்றிலுள்ள சத்துக்கள் குறித்த தேடல் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் உடனடி தோசை மாவு, இட்லி மாவு, ஆப்ப மாவு போன்ற ரெடிமேட் உணவு வகைகளிலும் சிறுதானிய உணவுகள் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளன.உடுமலை பகுதியில் கம்பு, ராகி, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட சிறுதானிய தோசை மாவு உற்பத்தியை குடிசைத்தொழிலாக பலர் செய்து வருவாய் ஈட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து உடுமலை ருத்ரப்பநகரைச் சேர்ந்த மாவு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- கொரோனா காலத்தில் வீட்டிலேயே பால், தோசை மாவு மற்றும் ஆப்ப மாவு விற்பனை செய்து வந்தோம்.தற்போது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான சிறுதானிய தோசை மாவுகளை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.

சோளத்தில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலம் உள்ளது.இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது.ராகி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.மற்ற சிறுதானியங்களை விட பல மடங்கு கால்சியம் ராகியில் உள்ளது.கம்பு உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது.அதிக அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளிட்ட பல உயிர்ச் சத்துக்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் பிடிக்கிறது.இதுபோன்ற சிறுதானிய உணவுகளை விற்பனை செய்வதுடன் அவற்றிலுள்ள சத்துக்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News