உள்ளூர் செய்திகள்

சென்னை புறநகர் பகுதியில் நள்ளிரவில் பலத்த மழை- இடிமின்னலுடன் 1 மணிநேரம் வெளுத்து வாங்கியது

Update: 2022-08-18 08:29 GMT
  • திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
  • சென்னை பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

சென்னை:

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 3 நாட்களுக்கு லேசான மற்றும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளிலும் திருவள்ளூர் மாவட்டத்திலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, குமணன் சாவடி, மாங்காடு, குன்றத்தூர், ஜமீன்கொரட்டூர் பகுதிகளில், நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

ஆவடி, திருவேற்காடு, சோமங்கலம், வானகரம், மதுரவாயல், விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர் பகுதிகளில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சென்னை பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது. குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளிலும் மழை பெய்தது. சூளைமேடு கோடம்பாக்கம் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. திருவள்ளூரில்-63 மி.மீ, பூந்தமல்லி-42 மி.மீ, ஜமீன் கொரட்டூர்- 33 மி.மீ, பள்ளிப்பட்டு-30 மி.மீ, பூண்டி-22 மி.மீ, ஆவடி- 18 மி.மீ, திருவலாங்காடு-15 மி.மீ, திருத்தணி-11 மி.மீ, தாமரைப்பாக்கம்-5 மி.மீ, பொன்னேரி-2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த திடீர் மழையால் இரவு 11 மணி முதல் அதிகாலை 6:00 மணி வரை சுமார் 8 மணி நேரமாக திருவள்ளூர் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் திருவள்ளூர் அதனை சுற்றியுள்ள மணவாள நகர் போலிவாக்கம், அரண்வாயில், கடம்பத்தூர், செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, ஈக்காடு, திருப்பாச்சூர், ராஜாஜிபுரம், காக்களூர் ஆகிய பகுதிகளில் இடியுடனும் சூறைக்காற்றுடனும் மழை பெய்தது.

இந்த சூறைக்காற்றில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜே.என். சாலை, பூங்கா நகர், பெரியார் நகர், காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்துள்ளது.

அரசியல் கட்சி பிரமுகர்கள் வைத்த அனைத்து பேனர்களும் இந்த சூறாவளி காற்றில் அறுந்து விழுந்தது இதில் 2 பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் சுகாதார ஆய்வாளர் சுதர்சன் மற்றும் ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News