உள்ளூர் செய்திகள்

நகராட்சி அலுவலகத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்.

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் அதிகாரிகள் நியமிக்கப்படாததால் சுரண்டை பொதுமக்கள் பாதிப்பு

Published On 2022-06-10 10:07 GMT   |   Update On 2022-06-10 10:07 GMT
  • சுரண்டை பகுதி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் உரிய அதிகாரிகள் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் பாதிப்புகுள்ளாகி வருகின்றனர்.
  • பல பணியிடங்களுக்கு இதுவரை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

சுரண்டை:

தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் வணிக நகரமான சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சமூக ஆர்வலர்களும்

வலியுறுத்தியதின் அதனடிப்படையில் சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நகர் மன்றத் தேர்தலும் நடத்தப்பட்டு நகராட்சி சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஆனால் சுரண்டை நகராட்சியில் முன்பிருந்த பேரூராட்சி நிர்வாக அதிகாரி பணியிடம் ஆணையாளர் என்ற பெயரில் நிரப்பப்பட்டது தவிர வேறு எந்த அதிகாரிகளும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

குறிப்பாக நகராட்சியின் மேலாளர் மற்றும் நகராட்சி பொறியாளர், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், நகர அமைப்பு அலுவலர் (டவுன் பிளானிங் ஆபிசர்), பணி மேற்பார்வையாளர், வருவாய் ஆய்வாளர், கேரியர் வரி வசூலிப்பவர்கள், பதிவரை எழுத்தர் கூடுதல் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு இதுவரை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

இதில் குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு பிற நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் சுரண்டை நகராட்சிக்கு வருகை தர முடியவில்லை.

இதனால் நகராட்சியின் அன்றாட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதிலும், பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் அளிப்பது, கட்டிட வரைபட அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவில்லை.

சுமார் ஆயிரம் கட்டிட வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரீசீலனையே கூட செய்யப்படவில்லை. எனவே கட்டிடங்களைக் கட்டுவதில் பொது மக்கள் சிரமங்களை அடைகின்றனர்.

இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏறுபட்டுள்ளது‌. மேலும் நகராட்சியின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே கட்டிட வரைபட அனுமதி வழங்குவதற்கு காலதாமதம் ஆவதை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

எனவே தமிழக அரசும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுரண்டையில் நகராட்சிக்குரிய அனைத்து அதிகாரிகளையும் நியமித்து மக்கள் பணியில் கூடுதலாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News