உள்ளூர் செய்திகள்

மலை பகுதியில் பயிற்சி மேற்கொண்ட போலீசார்.


பாபநாசம் மலைப்பகுதியில் நடைபயிற்சி, மூச்சு பயிற்சி மேற்கொள்ளும் போலீசார்- மன அழுத்தத்தை குறைக்க டி.எஸ்.பி. நடவடிக்கை

Published On 2022-08-14 09:05 GMT   |   Update On 2022-08-14 09:05 GMT
  • சுமார் 100 - க்கும் மேற்பட்ட போலீசார் மலைப்பாதையில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சியும், மூச்சு பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.
  • வனப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் போலீசாருக்கு மன நிம்மதி ஏற்படுகிறது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் கூறினார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்தின் கீழ் அம்பை, கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, வீ.கே.புரம் உள்ளிட்ட 4 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

நடை பயிற்சி

இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில், அம்பை இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 100 - க்கும் மேற்பட்ட போலீசார் வாரத்தில் ஒருநாள் அதாவது சனிக்கிழமை பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து, காரையார் செல்லும் மலைப்பாதையில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சியும், மூச்சு பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் கூறுகையில், வனப்பகுதியில் நடைப்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி மேற்கொள்வதால் போலீசாருக்கு மன நிம்மதியும், ஒருவித அமைதியும் ஏற்படுகிறது. இதன்மூலம் அம்பை சரகத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்படுகிறது.

மேலும் அவர்களுக்கு மனஅழுத்தம் குறைகிறது. எங்களுக்கு ஏதேனும் தெரிவிக்க வேண்டுமனாலும் அவர்கள் எளிதில் எங்களிடம் தெரிவிக்க இந்த முகாம் உதவுகிறது. உயர் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துகளை போலீசாருக்கும் தெரிவித்து கலந்துரையாடல் செய்ய எளிதாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News