உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு பருவமழை காலத்தில் அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - முன்னெச்சரிக்கை கூட்டத்தில் தென்காசி கலெக்டர் பேச்சு

Update: 2022-09-29 08:45 GMT
  • தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நாட்களில் மழை பொழிவை எதிர்கொள்ள அலுவலர்கள் துரிதமாக பணியாற்றிட வேண்டும்.
  • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

தென்காசி:

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து சிறப்பு ஆய்வுக் கூட்டம் தென்காசியில் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நாட்களில் மழை பொழிவை எதிர்கொள்ள அலுவலர்கள் துரிதமாக பணியாற்றிட வேண்டும். தற்போதைய மழையால் பல ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது.

எனவே அலுவலர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், ஏரி மற்றும் குளங்களை பலப்படுத்துதல், கால்வாய் வடிகால்கள், ஏரி, குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். முன்னெச்சரிக்கை தகவல்களை விரைந்து அளித்திடும் வகையில் குடியிருப்போர் நலச்சங்கங்களின் பட்டியல் தயாரித்து வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு இளைஞர்களை கண்டறிந்து பயிற்சி அளித்து தேவையான மீட்பு உபகரணங்களை வழங்கி ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு இருப்பு , அரசு சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேடல் மீட்பு நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி, பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

மீட்புக் குழுவில் குறுகியகால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட் சேதமும், உயிர்ச் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும் அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் ரெங்கநாயகி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News