உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் நடன கலைஞரை குத்தி கொல்ல முயன்ற 4 பேர் கைது

Published On 2022-07-30 07:25 GMT   |   Update On 2022-07-30 07:25 GMT
  • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நடன கலைஞரை ஒரு கும்பல் கத்தியால் குத்தினர்.
  • இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் என்ற தேவா. இவர் திண்டுக்கல் விஜய் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். இவரது மகன் மோகன்பிரகாஷ்(24). இவரும் கக்கன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(20) என்பவரும் நடனக்குழு ஆரம்பிக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எம்.காலனியில் நடனக்குழுவை அமைத்தனர்.

ஆனால் அதில் போதிய வருவாய் கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்ச்செல்வன் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு மோகன் பிரகாசிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று நடனப்பள்ளி அருகே மோகன்பிரகாஷ் நடந்து வந்த போது தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த மோகன்பிரகாசை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி ஆகியோர் வழக்குபதிவு செய்து மோகன்பிரகாசை கத்தியால் குத்திய தமிழ்ச்செல்வன், கக்கன்நகரை சேர்ந்த சங்கர்கார்த்திக்(22), சங்கரபாண்டி(18), தமிழரசன்(22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News