உள்ளூர் செய்திகள்
தக்காளி

தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை- பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

Update: 2022-05-21 05:47 GMT
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினசரி 900 டன் வரை வந்து கொண்டிருந்த தக்காளியின் வரத்து தற்போது பாதியாக குறைந்துவிட்டது.
போரூர்:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து 36 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

பரவலாக பெய்து வரும் தொடர் மழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு வியாபாரிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தே தற்போது வரை தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக வழக்கத்தை விட 2 மடங்கு தேவை அதிகரித்து கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துள்ளது.

இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்கப்படுகிறது. மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120ஐ கடந்தும் விற்கப்படுகிறது. கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி கடந்த 2 நாட்களுக்கு முன்பே ரூ.120ஐ கடந்து விற்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கோயம்பேடு மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது :-

கன்னியாகுமரி தொடங்கி தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் அதேபோல் கோவை, நாமக்கல், திருச்சி ஆகிய பகுதிகள் என பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளியை தினசரி கொள்முதல் செய்து செல்கின்றனர்.

வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினசரி 900 டன் வரை வந்து கொண்டிருந்த தக்காளியின் வரத்து தற்போது பாதியாக குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக 400 முதல் 450டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது. மழை பொழிவு குறைந்து தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளி ரூ.900-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் ரூ.200 அதிகரித்து ஒரு பெட்டி தக்காளி ரூ.1100-க்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News