உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

சென்னையில் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டியதாக 161 வழக்குப்பதிவு

Update: 2022-05-18 09:13 GMT
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பொது இடங்களில் சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம் மற்றும் விளம்பரங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் சாலையின் மைய தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்து பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பஸ் நிழல் கூடங்கள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தமிழக கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையில் கண்கவர் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இதுதவிர சாலைகள், தெருக்களில் உள்ள பெயர் பலகைகள், தெருக்கள் பெயர், வார்டு எண், பகுதி எண், மண்டல எண் அஞ்சல் குறியீடு, டிஜிட்டல் முறையில் பொருத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த பெயர் பலகைகளில் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று விதிமீறல் செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவித்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் பொது இடங்களில் சுவரொட்டிகள், இதர விளம்பரங்கள் மேற்கொண்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து 161 புகார்கள் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருவொற்றியூர் மண்டலத்தில் தான் அதிகபட்சமாக 129 புகார்கள் வந்துள்ளன. மற்ற மண்டலங்களில் 2, 3 என்ற அளவில் புகார் பெறப்பட்டுள்ளது.

எனவே சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பொது இடங்களில் சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம் மற்றும் விளம்பரங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News