உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த வேலிப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் - வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

Published On 2022-05-16 05:27 GMT   |   Update On 2022-05-16 05:27 GMT
சமீப காலங்களாக பருவநிலை மாற்றத்தால் ஆண்டு முழுவதும் எந்த பருவத்திலும் திடீரென்று பலத்த காற்று வீசி பயிர் சேதத்தை ஏற்படுத்துகிறது.
உடுமலை:

உடுமலை பகுதியில் சித்திரை மாதத்தில் அதிக அளவில் வெப்பம் கலந்த காற்று வீசும். இதனைத் தொடர்ந்து படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்து ஆடி மாதத்தில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும்.

அதற்கேற்ற வகையில் விவசாயிகள் திட்டமிட்டு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உதாரணமாக காற்று அதிகரிக்கும் காலங்களில் வாழை மரங்களுக்கு முட்டு கொடுத்தல், கயிறு கட்டி பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள்.

ஆனால் சமீப காலங்களாக பருவநிலை மாற்றத்தால் ஆண்டு முழுவதும் எந்த பருவத்திலும் திடீரென்று பலத்த காற்று வீசி பயிர் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுக்கும் விதமாக நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியமாகும். அவ்வாறு எல்லா பருவத்திலும் பயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வேலிப்பயிர் சாகுபடி மேற்கொள்ள தோட்டக்கலைத்துறையினர் வழி காட்டியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

வேகமான காற்று நேரடியாக பயிர்களைத் தாக்கும்போது மகசூல் இழப்பு மட்டுமல்லாமல் பயிர் சேதமும் ஏற்படும் நிலை உள்ளது. நமது முன்னோர்கள் பெரும்பாலான விளை நிலங்களில் வேலியையொட்டி பனை உள்ளிட்ட மரங்களை வளர்த்து வந்தனர்.

காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதுகாப்பு அரண்கள் காணாமல் போய்விட்டது. வாழை, பப்பாளி உள்ளிட்ட பயிர்கள் எளிதில் காற்றினால் சேதமடையும் தன்மையுடையவை. இவற்றின் சாகுபடி நிலங்களில் வேலிப்பயிராக அகத்தி, தேக்கு, மலை வேம்பு உள்ளிட்ட பயிர்களை வளர்க்கலாம். 

இவை காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி பயிர் பாதுகாப்பு வழங்குவதுடன் அவற்றின் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பும் உருவாகிறது. 

மேலும் காய்கறிப் பயிர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களிலும் வெப்பக் காற்றைக் கட்டுப்படுத்தும் தடுப்பானாகவும், பூச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய பறவைகள் வசிக்கும் பறவைத் தாங்கிகளாகவும் வேலிப்பயிர்கள் பயன்படுகிறது.

இதுதவிர வேலிப்பயிராக ஆமணக்கு சாகுபடி செய்யும்போது அது கவர்ச்சிப் பயிராக செயல்பட்டு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து பிரதான பயிருக்கு பாதுகாப்பு வழங்குகிறது. இவ்வாறு விவசாயிகளுக்கு பல வகைகளில் நன்மை தரக்கூடிய வேலிப்பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News