உள்ளூர் செய்திகள்
முகாமில் பயனாளிக்கு ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் கையேடு வழங்கினார்.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

Published On 2022-05-15 09:17 GMT   |   Update On 2022-05-15 09:17 GMT
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தென்திருப்பேரை:

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு விலையில்லா வெள்ளாடு வழங்கி தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின் கீழ் தலா 5 வெள்ளாடுகள் வழங்கி வருகிறது.

அதன்படி மீன் வளம், மீனவர் நலம் கால்நடைத்துறை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட  கலெக்டர் செந்தில்ராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜா, வழிகாட்டுதல்படி ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பூதலிங்கம் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி கையேடு வெளியிட்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

கால்நடை மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் செல்வம் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி அளித்தார். நாலுமாவடி கால்நடை மருந்தக மருத்துவர் கீர்த்தனா திட்டத்தின் நோக்கம் மற்றும் வளர்ப்பு முறை குறித்து பேசினார்.

பேய்க்குளம் கால்நடை மருந்தக மருத்துவர் தாமோதரன் கால்நடை பராமரிப்புத்துறை திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.  பயிற்சியில் வெள்ளாடு கொட்டில் முறை, தீவன வேளாண்மை, நோய் தடுப்பு, குடற்புழு நீக்கம் மற்றும் கால்நடை காப்பீடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

 முகாமில் சீனிவாசா சேவை அறக்கட்டளை கள இயக்குனர் நந்தகோபால், கால்நடை மருத்துவர்கள் ஆத்தூர் செந்தில் கண்ணன், ஆழ்வார் திருநகரி சுரேஷ், கால்நடை ஆய்வாளர் பேச்சியம்மாள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் நாசரேத் கால்நடை மருத்துவர் தினேஷ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News