உள்ளூர் செய்திகள்
கடல் சீற்றம்

கடும் சூறாவளி காற்றினால் கன்னியாகுமரியில் இன்று கடல் சீற்றம்- சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க தடை

Published On 2022-05-13 06:03 GMT   |   Update On 2022-05-13 06:03 GMT
சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம், சொத்தவிளை, வட்டக்கோட்டை பீச், ராஜாக்கமங்கலம் துறை போன்ற இடங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

கன்னியாகுமரி:

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் அமாவாசை முடியும் தருவாயில் பவுர்ணமி தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை முதல்”திடீர்”என்று பயங்கர சூறாவளிகாற்றுவீசியது. இதனால்கடல் பயங்கர சீற்றமாக காணப்பட்டது.

சுமார் 10அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்தது. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள்கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர்.

இந்த ராட்சத அலைகளால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஏற்கனவே கடலில் ஆனந்த குளியல் போட்டுக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினார்.இதேபோலகோவளம், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம், சொத்தவிளை, வட்டக்கோட்டை பீச், ராஜாக்கமங்கலம் துறை போன்ற இடங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறைந்த அளவு வள்ளம் மற்றும் கட்டுமரங்களில்மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர். அதுவும் மீன்கள் அதிகளவில் கிடைக்காமல் கரை திரும்பினர். இதனால் மீன் சந்தைகளில் மீன் வரத்து குறைவாக காணப்பட்டது. அதேசமயம் மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்து இருந்தது.

Tags:    

Similar News