உள்ளூர் செய்திகள்
விஜயகாந்த்

கோயம்பேட்டில் தே.மு.தி.க. அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிப்பு - விஜயகாந்த் கண்டனம்

Update: 2022-05-08 02:48 GMT
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலத்தில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே ஓலையால் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பந்தலில் தினமும் தே.மு.தி.க.வினர் தண்ணீர் வைத்து பராமரித்து வந்தனர். அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இந்த தண்ணீர் பந்தலுக்கு யாரோ மர்மநபர்கள் தீ வைத்து விட்டனர். ஓலையால் வேயப்பட்டு இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும், ரோந்து பணியில் இருந்த கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் தண்ணீர் பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது. அதில் கட்டி இருந்த தே.மு.தி.க. பேனரும் தீயில் கருகியது.

இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் பந்தலை தீ வைத்து எரித்த நபர்கள் யார்? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தே.மு.தி.க.வின் கொள்கைப்படி அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு நேற்று (நேற்று முன்தினம்) இரவு மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத சமூக விரோதிகள் சிலர் இதுபோன்ற தரமற்ற செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலேயே இதுபோன்ற சம்பவம் அரங்கேறிய நிலையில் சாமானிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு எவ்வாறு கிடைக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறா வண்ணம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி. கேமராக்களை அனைத்து இடங்களிலும் பொருத்தி காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மக்களின் தாகத்தை தணித்த தண்ணீர் பந்தலுக்கு தீயவர்கள் தீ வைத்த சம்பவம் ‘நல்லதுக்கு காலம் இல்லையோ’ என நினைக்க தோன்றுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News