உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம்- வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

Published On 2022-05-06 07:26 GMT   |   Update On 2022-05-06 07:26 GMT
விக்னேஷ் மரணம் குறித்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் 26.4.2022 அன்று தெரிவித்த தகவலுக்கும், உடற்கூறு ஆய்வு அறிக்கையில் உள்ள தகவல்களுக்கும் முரண்பாடு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் முதியவர்களை குறிவைத்து கொலை மற்றும் கொள்ளை நடப்பது பற்றியும், சென்னை விக்னேஷ் பிரேத பரிசோதனை அறிக்கை பற்றியும், சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், தம்மரெட்டிபாளையம் ஊராட்சியில், ரங்கம்பாளையம் கிராமத்தில் ஏழரை பவுன் நகைக்காக 14.12.2021 அன்று 65 வயது முதியவர் பழனிசாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 61) ஆகிய இருவரையும் கொள்ளையர்கள் தலையில் தாக்கி, கயிற்றால் கழுத்தை நெறுக்கி கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தனியாக அவர்கள் வீட்டில் வசித்து வந்தததாக கூறப்படுகிறது.

இதுவரை கொள்ளையர்களைப் பற்றிய துப்பு துலங்கவில்லை என்று கூறப்படுகிறது. தனியாக வசிக்கும் முதியவர்களை தாக்கி இந்த இரு கொலைகள் நடந்துள்ள நிகழ்வு, இப்பகுதி மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு நிகழ்வில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், முருங்கத்தொழுவு கிராமத்தில் உப்பிலிபாளையம் அருகில் 68 வயது முதியவர் - கே.சி. துரைசாமி என்பவர் கொள்ளையர்களால் தலையில் தாக்கப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி தலையில் தாக்கப்பட்டு, தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவத்தில் இருபத்தி ஏழரை பவுன் நகைகள்
களவாடப்பட்டுள்ளன.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பான்மையான முதியவர்களின் மகனோ, மகளோ திருமணமாகி வெளிமாட்டத்தில், வெளி  நிலத்தில், வெளி நாடுகளில் வசிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே பெரியவர்கள் தங்களது இறுதி காலத்தை, தாங்கள் பிறந்த சொந்த ஊரில், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் அமைதியாக வாழ்வதையே விரும்புவார்கள். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. காவல்துறையின் பணி ஆகும்.

ஆனால் சிறிது காலமாக இது போன்று தனியாக வசிக்கும் முதியவர்கள் குறிவைத்து தாக்கப்படுவதும், கொடூரமாக கொலை செய்யப்படுவதும், அவர்களது நகைகள் கொள்ளையடிக்கப்படும் செய்திகள், தமிழகத்தில் தனியாக வசிக்கும் வயதானவர்களிடையே ஒரு பதற்றத்தை, அச்ச உணர்வை உண்டாக்கியுள்ளது. நான் இந்த இரு நிகழ்வுகளை பற்றி மட்டும் குறிப்பிட்டுள்ளேன். இது போல் பல நிகழ்வுகள் நடந்திருக்கலாம். எனவே தமிழக காவல்துறையை அனைத்து சம்பவங்களையும் தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதே சமயத்தில் குறிப்பாக இதுபோன்று தனிமையில் வாழும் வயதான தம்பதியினருக்கும், தனியாக வசிக்கும் வயதானவர்களுக்கும் முழு அளவில் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

காவல் விசாரணையின் போது விக்னேஷ் மரணமடைந்தது குறித்து 26.4.2022 அன்று நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அப்போது முதலமைச்சர் பதில் கூறும் போது, 19.4.2022 அன்று காலை உணவு வழங்கப்பட்டதாவும், விக்னேஷ் உணவு சாப்பிட்டபின் வாந்தி, வலிப்பு வந்ததால், தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று, மேல் சிகிச்சைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தாக, முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

ஆனால் சமீபத்தில் வெளியான விக்னேஷின் உடற்கூறு ஆய்வு அறிக்கையின்படி அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக உச்சந்தலையில் 1 செ.மீ ஆழமுள்ள காயம் உள்ளதாகவும், முகத்தின் தாடை பகுதி, தோள்பட்டை, இடது தொடையின் நடுப்பகுதி முதல் கீழ் முட்டி வரை என பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டு அதிகமான ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும். வலது கால் எலும்பு முறிவு மற்றும் பாதங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது என பிரேத பரிசோதனை
அறிக்கை தெரிவிக்கிறது.

விக்னேஷ் மரணம் குறித்து சட்டமன்றத்தில் 26.4.2022 அன்று முதலமைச்சர் தெரிவித்த தகவலுக்கும், தற்போது வெளியாகியுள்ள உடற்கூறு ஆய்வு அறிக்கையில் உள்ள தகவல்களுக்கும் முரண்பாடு உள்ளதால், மரணத்தில் சந்தேகம் எழுகிறது. எனவே இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, உடனடியாக சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும் இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags:    

Similar News