உள்ளூர் செய்திகள்
பழைய இருப்புகளால் கட்டப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள்.

பல்லடம் அருகே சின்னகரையில் பழைய இரும்புகளை கொண்டு கட்டப்பட்டு வரும் சாலை தடுப்பு

Published On 2022-05-04 10:12 GMT   |   Update On 2022-05-04 10:12 GMT
பல்லடம் அருகே தரமில்லாமல் கட்டப்படும் சாலை தடுப்பு வளைவு பணியை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் நால்ரோடு சந்திப்பு உள்ளது.  போக்குவரத்து அதிகமுள்ள பகுதி என்பதால் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகின்றன. இதனையடுத்து ரோட்டின் நடுவே தடுப்பு வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் சாலை தடுப்பு வளைவு பணியில் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதாகவும், ஏனோ, தானோ என குறைபாடுகளுடன் பணி நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது;  சின்னக்கரை பகுதியில் ஏராளமான சாய ஆலைகள், பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.

 இந்த நிலையில் சின்னக்கரை நால்ரோடு பகுதியில், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், இதனை முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து ரோட்டின் நடுவே தடுப்பு வளைவு அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அமைக்கப்படும் இரும்புக் கம்பிகள், பழைய இரும்பு கடையில் இருந்து பழைய இரும்பு குழாய்களை வாங்கிவந்து கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே துருப்பிடித்து மோசமாக உள்ள இரும்புக் குழாய்களை, சாலை தடுப்பு வளைவு கட்டுமானப் பணியில் பயன்படுத்துகின்றனர். இது எவ்வளவு நாள் தாங்கி நிற்கும் இதனை ஆய்வு செய்யும் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்.

 ஏற்கனவே கட்டடப் பணி நடைபெற்று அதற்கு முறையாக தண்ணீர் ஊற்றாமல் இருந்தார்கள் அதற்கு போராட்டம் நடத்துவதாக அறிவித்தவுடன் கட்டுமான பணிக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது.

 இந்த நிலையில், தரமான இரும்புக் குழாய்களை கொண்டு சாலை தடுப்பு வளைவு அமைக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News