உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் இருந்து உடுமலைக்கு அதிகாலையில் பஸ்கள் இயக்க நடவடிக்கை

Published On 2022-05-01 07:30 GMT   |   Update On 2022-05-01 07:30 GMT
தற்போது இயல்பான நிலை ஏற்பட்டும், அரசு போக்குவரத்துக்கழகம் வாயிலாக இயக்கப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.
உடுமலை:

திருப்பூரில் இருந்து பல்லடம், கேத்தனூர், ஜல்லிபட்டி, செஞ்சேரிபுத்தூர், குடிமங்கலம் வழியாக உடுமலைக்கு அதிகாலை 2 மணி,3 மணி மற்றும் 4 மணிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வரவும், பொதுமக்கள் ரயில்கள் வழியாக திருப்பூர் வந்திறங்கி, குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம், மறையூர் மற்றும் மூணார் செல்ல அதிகாலையில் இயக்கப்பட்ட பஸ் வசதியாக இருந்தது. அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கொரானா காலத்தில், அதிகாலையில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன.

மீண்டும் தற்போது இயல்பான நிலை ஏற்பட்டும், அரசு போக்குவரத்துக்கழகம் வாயிலாக இயக்கப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. அதனால், திருப்பூரில் இருந்து அதிகாலை நேரங்களில், உடுமலைக்கு செல்ல வேண்டியவர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

அதேபோல் திருப்பூர் ரோட்டிலுள்ள, கிராமங்களிலிருந்து, விவசாயிகள் விளை பொருட்களை உடுமலை உழவர் சந்தைக்கும், நகராட்சி சந்தைக்கும் கொண்டு வர முடியாமல் வீணாகின்றன. 

எனவே மீண்டும் பஸ்களை இயக்க வேண்டும்எ ன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. 

இதனையடுத்து, திருப்பூர் பழைய பஸ்  நிலையத்தில் இருந்து அதிகாலை, 1:50 மணிக்கும், சேலத்திலிருந்து வரும் டி.என்.,39 எண் 385 எண்ணுள்ள பஸ்2மணிக்கு எடுத்து உடுமலைக்கு இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் மதுரை வழித்தட பஸ், டி.என்.,39 எண் 329, திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு அதிகாலை 2 மணிக்கு வந்து, பயணிகளை ஏற்றி 2:30க்கு, அங்கிருந்து புறப்பட்டு உடுமலைக்கு  செல்ல அறிவுறுத்தப்படடு உள்ளது.

திருப்பூரில் இருந்து அதிகாலை,4 மணிக்கு ஒரு தனியார் பஸ்சும், 4:30 மணிக்கு ஒரு தனியார் பஸ்சும், உடுமலைக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது அவை இரண்டும் அதிகாலை நேரத்தில் இயக்கப்படுவதில்லை.

மீண்டும் அவற்றை இயக்கவில்லை என்றால் வழித்தட பர்மிட்டை ரத்து செய்து, அரசு பஸ்கள் இயக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News