உள்ளூர் செய்திகள்
பாளை மனகாவலம்பிள்ளை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சிறப்பு முகாமில் ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியர்.

நெல்லையில் இன்று 350 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2022-04-30 09:38 GMT   |   Update On 2022-04-30 09:38 GMT
நெல்லையில் இன்று 350 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
நெல்லை:

தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொது இடங்களில் மக்கள் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 67 சதவீதம் பேருக்கு இருதவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு முதல் தவணையாக 92 சதவீதம் பேரும், 12 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு முதல் தவணையாக 68 சதவீதம் பேரும் தற்போது தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

இதுவரை 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தகுதிவாய்ந்த நபர்கள் இன்று நடைபெறும் முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் விஷ்ணு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி இன்று மாநகரில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதே போல மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி பகுதிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டனர்.

இதுதவிர இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதில் சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News