உள்ளூர் செய்திகள்
பலியான சைலப்பன்.

ஆழ்வார்குறிச்சியில் பள்ளிக்கூட பஸ் மோதி மாணவர் உயிரிழப்பு- டிரைவர் மீது வழக்கு

Published On 2022-04-24 09:00 GMT   |   Update On 2022-04-24 09:00 GMT
ஆழ்வார்குறிச்சியில் பள்ளிக்கூட பஸ் மோதி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அருணாச்சலம். இவரது மகன் சைலப்பன் (வயது 17).

இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார் . நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் தனது ஊருக்கு செல்வதற்காக ஆழ்வார்குறிச்சி பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அதே பள்ளி பேருந்து ஆழ்வார்குறிச்சியில் இருந்து பொட்டல்புதூர் செல்வதற்காக ஆழ்வார்குறிச்சி பஸ் நிலையம்  அண்ணா சிலை அருகே திரும்பியபோது, எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த சைலப்பன் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சைலப்பன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்ற வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் பள்ளி பஸ் டிரைவர் சங்கரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது விபத்து நடந்த இடம் மிகவும் குறுகலானது. இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான கடைகள்,வங்கி, ஓட்டல்கள் உள்ளன. எப்போதும் நெருக்கடியாக காணப்படும் இந்த சாலையில் மாலை நேரத்தில் பள்ளி முடிந்ததும் மாணவ-மாணவிகள் கூட்டம் அலைமோதும்.

அந்த நேரத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசாரை அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News