உள்ளூர் செய்திகள்
ஜல்லி கற்களில் புதைந்த அரசு பஸ்.

புதிதாக போடப்படும் 4 வழிச்சாலையில் ஜல்லி கற்களில் புதைந்த அரசு பஸ்

Update: 2022-04-16 10:12 GMT
புதிதாக போடப்படும் 4 வழிச்சாலையில் ஜல்லி கற்களில் புதைந்து அரசு பஸ் விபத்துக்குள்ளானது.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வரை ரூ.299 கோடி மதிப்பீட்டில் 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் இருந்து வாணியம் பாடி வரை 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது. தற்போது ஜோலார் பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரை 4 வழி சாலை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதனால் ஆங்காங்கே எந்திரங்கள் மூலம் சாலைகளை பள்ளம் தோண்டி புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் திருப்பத்தூர் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை வரை பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் 10 நிமிடங்களில் கடக்க வேண்டிய நேரத்தில் தற்போது 30 நிமிடங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது.  இதனால் சாலை பணி நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.

புதிதாக பள்ளம் தோண்டி ஜல்லி கற்கள் நிரப்பப்பட்ட சாலையில் நேற்று திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் புறப்பட்டது. 

அந்த பஸ் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சி வி.எம். வட்டம் பகுதியில் வந்தபோது ஜல்லி கற்கள் நிரப்பப்பட்ட சாலையில் வந்தபோது முன்பின் சக்கரங்கள் முழுவதுமாக ஜல்லிகற்களில் புதைந்தது. 

பஸ் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சிக் குள்ளாகினர். அலறி அடித்துக்கொண்டு அவர்கள் பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.  மாற்று  பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அதில் சென்றனர்.
Tags:    

Similar News