உள்ளூர் செய்திகள்
கரும்பு அரவை தொடக்கவிழாவில் பங்கேற்றவர்கள்

உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடக்கம்

Published On 2022-04-08 10:02 GMT   |   Update On 2022-04-08 10:02 GMT
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்பு டன்னுக்கு 2,750 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு, ஊக்கத்தொகையாக, ஒரு டன்னுக்கு 195 ரூபாய் வழங்குகிறது.

மடத்துக்குளம்:

உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழநி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம், கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இப்பகுதி விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.

2013-14ம் ஆண்டில், கரும்பு அரவை திருப்தியாக இருந்த நிலையில் வறட்சி, கரும்புக்கு உரிய விலை கிடைக்காதது, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கடந்த 8 ஆண்டாக கரும்பு அரவை குறைந்தளவே நடந்தது. 

2016-17, 2017-18 ஆகிய இரு ஆண்டுகள் ஆலை இயங்கவில்லை. கடந்தாண்டு 1,700 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு 63 ஆயிரம் டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டது. இந்நிலையில் பருவ மழைகள் சிறப்பாக பெய்ததோடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை விடுவிக்கப்பட்டதால் நடப்பாண்டு கரும்பு பதிவு அதிகரித்தது.

கரும்பு விவசாயிகளிடம் ஆலை அரவைக்கு 3 ஆயிரத்து, 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்பு டன்னுக்கு 2,750 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு, ஊக்கத்தொகையாக, ஒரு டன்னுக்கு 195 ரூபாய் வழங்குகிறது.

இதனையடுத்து நடப்பாண்டு அரவை சீசன் துவங்கும் வகையில் கடந்த மார்ச் 23-ந்தேதி ஆலையிலுள்ள பாய்லர்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா நடந்தது. தொடர்ந்து, ஆலை புனரமைப்பு பணி  மேகொள்ளப்பட்டு, கரும்பு வெட்டும் பணிகடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று முன்தினம் ஆலையில் கரும்பு அரவைப்பணி துவங்கியது. இதற்கான விழா ஆலை வளாகத்தில் சிறப்பு பூஜை களுடன் நடந்தது.

இதில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் சண்முகவேலு, ஆலை நிர்வாகக்குழு தலைவர் பழனிசாமி, கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ், மேலாளர் கண்ணன், பொறியாளர் செந்தில், ரசாயனர் வேணு-கோபால் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News