உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் நலனை தமிழக அரசு காக்கும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2022-04-08 09:09 GMT   |   Update On 2022-04-08 09:09 GMT
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

உக்ரைன் போரால் அங்கு படித்த தமிழக மருத்துவ மாணவர்களின் எதிர்கால நலன் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது எம்.எல்.ஏ.க்கள் எழிலன் (தி.மு.க.), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

உக்ரைன் நாட்டில் போரால் தவித்த 1890 மாணவர்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை நமது முதல்-அமைச்சரை சாரும். ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெசிந்தா தலைமையில் வாட்ஸ்-அப் குழு அமைத்து உக்ரைனில் படித்த மாணவர்களை ஒருங்கிணைத்து விமான நிலையத்துக்கு அழைத்து வரும் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி அங்குள்ள மாணவர்களை மத்திய அரசு அழைத்து வந்த விமானங்களில் 1890 மாணவர்களும் எந்தவித பாதிப்பும் இன்றி தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

மாணவர்களை மீட்டு வருவதற்காக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி கொடுத்தார். அவர்களின் பயண செலவையும் அரசே ஏற்றது.

சென்னை விமான நிலையத்துக்கே சென்று கடைசியாக வந்த மாணவர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. அவர்களின் கல்வி தொடருவதற்காக மத்திய அரசுக்கும், முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார். பிரதமரை நேரில் சந்தித்த போதும் கூறியுள்ளார். மாணவர்களின் மனநிலையை தெரிந்து கொள்ள 20 மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது.

எங்கெல்லாம் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு இருக்கிறதோ அங்கு படிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ருமேனியா, ஹங்கேரி, கஜகஸ்தான், செக்குடியரசு, போலந்து போன்ற நாடுகளில் மாணவர்களின் மருத்துவ படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்களும் வருகிறது.

எனவே உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். அவர்களின் எதிர்கால நலனை அரசு காக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News