உள்ளூர் செய்திகள்
கைது

கோயம்பேட்டில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

Published On 2022-04-08 07:06 GMT   |   Update On 2022-04-08 07:06 GMT
சென்னை கோயம்பேட்டில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.

இவர் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார்.

கோயம்பேடு நூறடி சாலையில் அவர் நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டான்.

இதேபோல் கோயம்பேடு பகுதியில் உள்ள பேக்கரி கடையில் தங்கி வேலை பார்த்து வரும் கார்த்திக்குமார் கடந்த மாதம் 2-ந் தேதி இரவு கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரது செல்போனையும் பறித்து தப்பினர்.

இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி “சைபர் கிரைம்” போலீசார் உதவியுடன் திருடு போன 2 செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தார்.

இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெகன், லோகேஷ், பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த சர்புதீன் ஆகிய 3 பேர் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

திருடிய செல்போனை அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்படுத்தியதால் அதன் ஐ.எம்.இ.ஐ எண் மூலம் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இதுபோல் வேறு எந்த இடங்களிலும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News