உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர்.

வடக்கன்குளம்-காவல்கிணறு சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்-நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-03-28 09:21 GMT   |   Update On 2022-03-28 09:21 GMT
வடக்கன்குளம்-காவல்கிணறு சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். நெல்லை மாநகராட்சி 8--வது வார்டுக்கு உட்பட்ட திம்மராஜபுரம் அருகே உள்ள கணபதியாபுரத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கணபதியாபுரம் ஆதி திராவிடர் மயானத்தில் மாநகராட்சி சார்பில் நன்மை கூடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை தனிப்பட்ட நபர் ஒருவர் எரியூட்டும் கூடம் கட்டுவதாக கூறி நன்மை கூட பணியை நடத்த விடாமல் தடுக்கின்றார். எனவே அந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நன்மை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்து தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து  ஒரு மனு அளித்தனர். அதில், நாங்குநேரி வட்டம் டோனாவூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதி, அதே கிராமத்தை சேர்ந்த பாமர மக்களிடம் சத்துணவு சமையல் பணியாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏராளமானவரிடம் சுமார் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

திராவிட தமிழர் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் மானூர் ஒன்றியம் எட்டான்குளம் கிராமத்தில் உள்ள கீழத் தெருவை சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

அதில், எங்களது பகுதியில் கடந்த 4 மாதமாக தெரு விளக்குகள் எரிய வில்லை.குடிநீர் குழாயில் தரைத்தளம் உடைந்து கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நாங்கள் நடந்து செல்லும் பாதை மிக மோசமான நிலையில் உள்ளது.எனவே புதிய பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் ராதாபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கிறிஸ்டோபர் தலைமையில் அக்கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராதாபுரம் -வடக்கன்குளம் வழியாக காவல்கிணறு செல்லும் சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மிக அதிக எடையுடன் கூடிய கனிமவளங்கள் ஏற்றி சென்று வருகிறது. அந்த கனரக வாகனங்கள் கிராமங்கள் வழியாக செல்வதால் சாலைகள் எளிதில் சேதம் அடைந்து விடுகிறது. தற்போது குண்டும்,குழியுமான சாலைகளாக அவை காட்சியளிக்கின்றன.

மேலும் சிறிய சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்களால் வாகன ஓட்டிகள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் அதிக மண் புழுதி ஏற்பட்டு பொதுமக்களின் கண்களும், அதனை சுவாசிப்பதால் நுரையீரலும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News