உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் குறித்து ஆவணப்படங்கள் தயாரிப்பு

Published On 2022-03-24 11:03 GMT   |   Update On 2022-03-24 11:03 GMT
கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு நேரடியாகச்சென்று குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.
உடுமலை:

கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. அதேநேரம் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காமல் இருக்க ‘கூகுள்மீட்’, ‘வாட்ஸ்ஆப்’, ‘யுடியூப்’ என, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘ஆன்லைன்’ வாயிலாக பாட வகுப்புகள் நடத்தப்பட்டன.

அவ்வகையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர், மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச்சென்றும், பாடங்களை அனிமேஷன் மற்றும் வீடியோ பதிவாக தயாரித்தும் பாட வகுப்புகளை நடத்தினர்.

இவ்வாறு மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் குறித்த ஆவணப்படங்கள் திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக தயாரிக்கப்படுகிறது. பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தலைமையிலான ஆசிரியர்கள் உள்ளடக்கிய குழுவினர் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டு வருகின்றனர். அப்போது உள்ளாட்சி பிரதிநிதி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர், மாணவர்களின் கருத்துகள் பதிவும் செய்யப்படுகிறது.

அதன்படி உடுமலை அடுத்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஆசிரியர் கண்ணபிரான் குறித்த ஆவணப்படம் பதிவு நடந்தது. இப்பணிகள் முடிந்தவுடன் ஆசிரியர்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைத்து அவற்றை வீடியோவாக பதிவு செய்து, சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவும் உள்ளது.
Tags:    

Similar News