உள்ளூர் செய்திகள்
சரண்

ராஜாக்கமங்கலம் அருகே வெடிவிபத்தில் தேடப்பட்ட வாலிபர் போலீசில் சரண்

Published On 2022-03-22 05:37 GMT   |   Update On 2022-03-22 05:37 GMT
ராஜாக்கமங்கலம் அருகே வெடிவிபத்தில் தேடப்பட்ட வாலிபர் போலீசில் சரணடைந்தார். தனிப்படை போலீசாரும் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்துகிறார்கள். வெடி மருந்து எங்கிருந்து வந்தது? இதில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளை பகுதியை சேர்ந்தவர் பாக்கிய ராஜன். அவர்கள் வீட்டில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இவரது மகள் வர்ஷா உயிரிழந்தார்.

ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி அவரது சகோதரி தங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ராமலட்சுமியின் மருமகன் ராஜேந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது.

இதில் அந்த பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் அதே பகுதியை சேர்ந்த ஆஷிகா (வயது12) என்ற சிறுமியும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி பிரதீப் புகார் செய்தார்.

புகாரின் பேரில் தர்மபுரம் ஜேன்ஸ் தெருவைச் சேர்ந்த மரபட்டறை அதிபர் ராஜேந்திரன் (40) மீது போலீசார் வெடிமருந்து பதுக்கி வைத்தல் உள்பட மூன்று பிரிவில் வழக் குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் தலைமறைவானார். இதையடுத்து வெடிமருந்து வெடித்த பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் சாக்கு மூட்டைகளில் மூட்டை மூட்டையாக வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 70 கிலோ வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் ராஜேந்திரனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவர் இன்று ராஜாக்கமங்கலம் போலீசில் சரணடைந்தார். சரணடைந்த ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிப்படை போலீசாரும் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்துகிறார்கள். வெடி மருந்து எங்கிருந்து வந்தது? இதில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News