உள்ளூர் செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்கு 90 நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு

Published On 2022-03-15 09:45 GMT   |   Update On 2022-03-15 09:45 GMT
6 நிலைக்குழு தலைவர்கள், 15 மண்டலக்குழு தலைவர்கள், 2 நியமன குழு உறுப்பினர்கள் மற்றும் 90 நிலைக்குழு உறுப்பினர்களுகள் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் வருகிற 30, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு புதிய மேயராக பிரியாவும், துணை மேயராக மகேஷ் குமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொறுப் பேற்றுக் கொண்டனர்.

இதுதவிர 200 கவுன்சிலர்களும் தனித்தனியாக பொறுப்பேற்றனர். மேலும் 6 நிலைக்குழு தலைவர்கள், 15 மண்டலக்குழு தலைவர்கள், 2 நியமன குழு உறுப்பினர்கள் மற்றும் 90 நிலைக்குழு உறுப்பினர்களுகள் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் வருகிற 30, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

முதலில் 15 மண்டல குழு தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் மன்ற கூட்டத்தில் மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் இத்தேர்தல் நடக்கிறது.

மதியம் 2.30 மணிக்கு 90 நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கிறது. ஒரு மண்டலத்துக்கு 6 நிலைக்குழு உறுப்பினர் வீதம் 15 மண்டலத்துக்கு மொத்தம் 90 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த 90 இடங்களில் 48 உறுப்பினர்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சாதிவாரியாக அல்லாமல் பெண்கள் என்ற அடிப்படையில் பொதுவாக ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 42 இடங்களுக்கு ஆண்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

2 நியமன குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 31-ந்தேதி காலை 9.30 மணிக்கு நடை பெறும். 6 நிலைக்குழு தலைவர்களுக்கான தேர்தல் மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது.

வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு, பணிகள் நிலைக்குழு, நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், கணக்குகள் மற்றும் தணிக்கை, கல்வி ஆகிய 6 நிலைக்குழுவிற்கு தலைவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:-

மாநகராட்சி நிலைக்குழு, வார்டு குழு தலைவர், நிலைக்குழு உறுப்பினர்கள், நியமன குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்பமனு 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வினியோகிக்கப்படுகிறது. 30, 31-ந்தேதி தேர்தல் நடக்கிறது. போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மன்ற கூட்டத்தில் இந்த பதவிகளுக்கான மனுவை என்னிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தால் தேர்தல் நடத்தப்படும். போட்டி இல்லாதபட்சத்தில் ஏகமனதாக தேர்வுசெய்யப்படுவார்கள். புதிய பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அந்தந்த மண்டலங்களில் பணியாற்றுவார்கள்.

நிலைக்குழு தலைவர்களுக்கு ரிப்பன் மாளிகையில் தனி அலுவலகங்கள் ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News